காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய டிஎஸ்பி கைது..!
காவல் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை ஏமாற்றிய டிஎஸ்பி மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபில் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலையில்லாத இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றியதாகக் மூத்த காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி இருவரும் லூதியானா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். மான்சா சிறையில் உள்ள ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார் நர்பிந்தர் சிங்.
அவரது மனைவி தீப் கிரண், நீதிபதியாக நடித்து அப்பாவி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து லட்சக்கணக்கில் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் லூதியானா காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, ஒவ்வொரு நபரிடமும் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து போலீஸ் ஆள்சேர்ப்பு படிவங்கள், பணம்,தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு கார்களை போலீசார் மீட்டனர். தற்போது, அவர்களது கூட்டாளிகளான லக்விந்தர் சிங் மற்றும் சுக்தேவ் சிங் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க போலீஸ் குழுக்கள் சோதனை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.