இரட்டை இலை வழக்கு சுகேஷ் பரோல் 12-ம் தேதி நீட்டிப்பு.!
சுகேஷ் சந்திரசேகர் பரோலை வரும் 12-ம் தேதி வரை நீட்டித்து நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் ஹவாலா புரோக்கர், மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
மேலும், சுகேஷ் சந்திரசேகர் மீது பல வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி சுகேசின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறியதால் டெல்லி நீதிமன்றம் அவருக்கு பரோல் வழங்கியது. ஆனால், அறுவை சிகிச்சை வரும் 7-ம் தேதிதான் சென்னையில் செய்யப்படுவதால் பரோல் நீட்டித்து வழங்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் வரும் 12-ம் தேதி வரை பரோல் நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.