ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!
நமது நாட்டிற்கு தேவை புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மீதான கவனமா? அல்லது ஐஸ்கிரீம் தயாரிப்பதா? என புதிய ஸ்டார்ட் அப்கள் குறித்த தனது கவலைகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பல்வேறு தொழில்துறை அதிபர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப்களை கடுமையாக சாடினார். மற்ற நாடுகள் எலெக்ட்ரிக் வாகனம், AI தொழில்நுட்பம் என சென்று கொண்டிருக்கும்போது இந்தியாவில் உணவு டெலிவரி, ஐஸ்கிரீம் தயாரிப்பு, சூதாட்ட ஆப் உருவாக்குவது என ஸ்டார்ட் அப் தொடங்குகிறார்கள் என கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், ” நமது நாட்டில் புதிய தொழில் தொடங்குவோர் தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தயாரிப்பது, பிஸ்கட்டுகள் தயார் செய்வது, உணவு டெலிவரி போன்ற வணிகங்களை தொடங்கி வருகின்றனர். நமது நாட்டிற்கு தேவை புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மீதான கவனமா? அல்லது ஐஸ்கிரீம் தயாரிப்பதா? ” எனவும் கேள்வி எழுப்பினர்.
நமது நாட்டில் அருமையான ஐஸ்கிரீம் மற்றும் குக்கீகள் தயாரிக்கும் பெரும் தொழிலதிபர்கள் சிலரை நான் அறிவேன். அவர்களின் குழந்தைகள் அதே பிராண்ட் அல்லது மற்றொன்றை உருவாக்கி அதேபோல ஐஸ்கிரீம் மற்றும் குக்கீகளை உருவாக்கி தொழிலில் மிகவும் வெற்றிகரமாக நடத்துகிறார்கள். அந்த விஷயத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதனை முன்னுதாரணாக கொண்டு பலரும் உணவு பொருள் தயாரிப்பில் இறங்கினால் இந்தியாவின் தலைவிதி அதுவா? இந்தியாவின் எதிர்காலம் இதில் திருப்தி அடையுமா? என தனது ஆதங்கத்தை பியூஸ் கோயல் வெளிப்படுத்தினார்.
நல்ல சுவையான ஆரோக்கியமான ஐஸ்கிரீம் , குறைவான முதலீடு, சைவ உணவு போன்ற சொற்களை கொண்டும், நல்ல பேக்கேஜிங்கையும் பயன்படுத்தி பலர் தங்களை ஒரு தொடக்க நிறுவனம் என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர். இது ஒரு தொடக்க நிறுவனம் அல்ல. இது ஒரு வணிகம் அவ்வளவு தான் என்று பியூஸ் கோயல் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ” நமது நாடு குறைக்கடத்திகள் (செமிகண்டெக்டர்ஸ்) மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் வளர்ந்து வருகிறது. நமது எதிர்காலத்திற்கு தேசத்தை தயார்படுத்தும் சுயசார்பு தொழில்நுட்பம், செமிகண்டெக்டர்ஸ் மற்றும் AI மாதிரிகளை உருவாக்குவதில் நமது நாடு பெருமளவில் முதலீடு செய்கிறது. அமெரிக்கா, சீனாவில் கட்டமைக்கப்படும் ஆழமான தொழில்நுட்ப உதவியோடு நமது நாட்டின் நுகர்வோர் இணைய தொடக்க நிறுவனங்களை ஒப்பிடும்போது அதனை விமர்சிப்பது எளிது.” என ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த தனது அதிருப்தியை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.