தயவுசெய்து பணிக்கு திரும்புங்கள்., மம்தா கோரிக்கை.! போராட்டத்தை தொடரும் மருத்துவர்கள்.!
கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
கொல்கத்தா : கடந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுதுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் மற்ற இடங்களில் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், சம்பவம் நிகழ்ந்த கொல்கத்தாவில் இன்னும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறி நீதிபதிகள், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி என பலரும் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறக்கூறி கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அதனை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு முதலமைச்சர் தரப்பு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் பேச்சுவார்த்தை முன்னர் கைவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பேச்சுவார்தையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவு செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டதால், நேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், போராட்டம் நடத்தும் ஜூனியர் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, கொல்கத்தா காவலத்துறை ஆணையர் வினீத் கோயல், மருத்துவக் கல்வி இயக்குனர் (DME) மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் (DHS) ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மருத்துவர்களுக்கான மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நோயாளிகள் நலக் குழுக்களை உருவாக்குவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவில் உள்துறை செயலாளர், மாநில டிஜிபி, மற்றும் ஜூனியர் மருத்துவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் மாநில அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
மேலும், ” மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சாமானியர்களின் கஷ்டத்தை மனதில் வைத்து, எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம். போராடும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களிடம் நான் மீண்டும் வேண்டுகோள் முன்வைக்கிறேன் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
இருந்தாலும், மேற்கு வங்க அரசு அளித்த வாக்குறுதிகளை முழுதாக நிறைவேற்றும் வரை மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடபோவதில்லை என அறிவித்தனர். இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கூறியுள்ளனர்.
மற்றொரு மருத்துவர் அனிகேத் மஹதோ கூறுகையில், ” சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலரை நீக்குவதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி உடன்படவில்லை.” என்று கூறினார்.