பிரசவத்தின் போது பெண் இறந்ததை அடுத்து மருத்துவர் தற்கொலை..!

Default Image

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள லால்சோட் நகரில் பிரசவத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பிரசவத்தின் போது பெண் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையில் மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

மருத்துவமனை முன் போராட்டம்:

இறந்த மருத்துவர் அர்ச்சனா சர்மா மற்றும் அவரது கணவர் மருத்துவர் சுனித் உபாத்யாய் ஆகியோர் லால்சோட்டில் ஆனந்த் மருத்துவமனை வைத்துள்ளனர். கெமாவாஸ் கிராமத்தில் வசிக்கும் லாலுராம் பைர்வா என்பவரின் மனைவி ஆஷா, பிரசவத்திற்காக திங்கள்கிழமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மதியம் பிரசவத்தின் போது ஆஷா இறந்தார். குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. இதனால், இழப்பீடு வழங்கக் கோரி ஆஷாவின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை (அதாவது நேற்று ) காலை வரை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லால்சோட் காவல் நிலையத்தில் கொலை வழக்கு:

மருத்துவர் அர்ச்சனாவின் அலட்சியப் போக்கால் தான் ஆஷா இறந்தார் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவர் அர்ச்சனாவின் மீது லால்சோட் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மருத்துவர் அர்ச்சனா, பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு காரணமாக ஆஷா இறந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு:

மருத்துவர் அர்ச்சனா மருத்துவமனையின் மேல் மடியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் அர்ச்சனா அறையின் கதவு மூடப்பட்டிருந்ததாக மருத்துவரின் உறவினர் வந்தனா ஷர்மா தெரிவித்தார். கதவைத் தட்டியபோதும் உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. இதுகுறித்து அவர் மருத்துவர்  சுனித்திடம் கூறினார். பின்னர், கதவை உடைத்து பார்த்தபோது ​​மருத்துவர் அர்ச்சனா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உயிரிழந்த மருத்துவர் அர்ச்சனா ஷர்மாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் அர்ச்சனா சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவரிடம் தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை என்று எழுதியிருந்தார். நான் என் குழந்தைகளையும் கணவரையும் மிகவும் நேசிக்கிறேன் என எழுதியுள்ளார்.

மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. மருத்துவர் அர்ச்சனா, மற்றும் அவரது கணவன் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்