“ரூபாய் 2,00,000 வேண்டாம்” தூக்கில் போடுங்கள்..!!
அரியானா கற்பழிப்பு விவகாரத்தில் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம், நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.
சண்டிகார்,
அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றவர்.
அவர் நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது அந்த பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் 3 குற்றவாளிகள் குறித்த தகவலை கூறி உள்ளார். தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என கூறி உள்ளார்.
இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மணீஷ் மற்றும் நிஷ்ஷூ என்ற இரு வாலிபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்கள் 3 பேரின் புகைப்படங்களை அரியானா போலீசார் வெளியிட்டுள்ளனர். மூவரையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் ரேவாரி நகரில் உள்ள தனது கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும். அரியானா பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு திட்டம், 2013ன் கீழ் எங்களுக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வழங்கிய ரூ.2 லட்சத்திற்கான காசோலையை திருப்பி தர முடிவு செய்துள்ளோம்.இந்த காசோலை எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வேண்டுவது அனைத்தும் நீதியே. சட்டத்தின் நீண்ட கரங்களை பற்றி நாங்கள் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால் காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறினார்.
DINASUVADU