சாலைகளில் பைக் டாக்சிகளை ஓட்டக்கூடாது..! போக்குவரத்துத் துறை எச்சரிக்கை..மீறினால்..!
டெல்லி சாலைகளில் பைக், டாக்சிகளை ஓட்டக்கூடாது என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
புதுடெல்லியின் சாலைகளில் பைக், டாக்சிகள் ஓட்டக்கூடாது என்று டெல்லி போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. இது மோட்டார் வாகனச் சட்டம், 1988-இன் படி விதி மீறல் என்றும் இதனை மீறுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் மின்சார மோட்டார் பைக்குகள் மற்றும் டாக்சிகள் பல வாகன ஒருங்கிணைப்பாளர்களால் இயக்கப்படுகின்றன. வணிக நோக்கங்களுக்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ஐ மீறுவதாகும்.
இதற்கு ரூ.5,000 திலிருந்து ரூ.10,000 வரை அபராதமும் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இதனையும் மீறி வாகன ஒருங்கிணைப்பாளர்கள் டெல்லி சாலைகளில் பைக் டாக்சிகளை ஓட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மகாராஷ்டிரா அரசு வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கு உரிமம் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 2019 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி உரிமம் இல்லாமல் வாகன ஒருங்கிணைப்பாளர்கள் இயங்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.