“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!
மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மக்களவையிலேயே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது. அவர் திமுக குறித்து பேசிய விஷயம் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவிக்க காரணமாகவும் அமைந்துள்ளது. கூட்டத்தொடரில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது என பேசியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான் ” திமுக இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்..இதனை அரசியல் செய்தி மாணவர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதாகவும், இதற்கு முன்னதாகவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறிவிட்டு இப்போது வேண்டாம் என கூறி நாடகம் ஆடுகிறார்கள்” என்பது போல பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த சிலர் அமலியிலும் ஈடுபட்டனர்.
அதன்பிறகு திமுக எம்பி கனிமொழிக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இடையே காரசாரமான வாக்கு வாதமும் நடந்தது. முதலில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. ஏன் இங்கு நிற்கும் சகோதரி கனிமொழி கூட என்னை சந்தித்து இந்த திட்டத்தை பற்றி பேசினார். இந்த திட்டம் பற்றி என்ன பேசினோம் என்று கூட அவருக்கு தெரியும்.
இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்வது தங்கை கனிமொழி அங்கு என்ன நடந்தது என்பதை அவருடைய கட்சி எம்பிகளுக்கு புரிய வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் திமுகவினர் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்… தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை என இரண்டு முறை ” திமுக குறித்து தர்மேந்திர பிரதான் பேசினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கனிமொழி ” தமிழகம் எப்போதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த நேரத்திலும் திமுக எம்பிக்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லவில்லை. தமிழ்நாடு எம்பிகளையும், தமிழக மக்களையும் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான் ” என்னுடைய பேச்சு வருத்தமளித்துள்ள காரணத்தால் நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என எதிர்ப்புகள் கிளம்பியவுடன் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு நாடாளுமன்றத்தை விட்டு வெளிய வந்த கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது ” என்னுடைய பெயரை கூறிவிட்டு நான் விளக்கம் கொடுக்க பேச அனுமதி கொடுக்காதது பெரிய தவறு. அதே சமயம் அவர் தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என பேசியது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்படும்” எனவும் கனிமொழி தெரிவித்தார்.