“நாங்க ஒன்னு கேட்டால், அவங்க ஒன்னு சொல்றாங்க.,” திமுக எம்பிக்கள் vs நிர்மலா சீதாராமன்!
நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்ட தொடர் பற்றி திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

டெல்லி : நேற்று மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து விவாதித்தார். அப்போது திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வந்தார். இதில் பேசிய நிர்மலா சீதாராம ஆவேசமாக,” நான் பதில் சொல்வேன். அதனை கேட்க வேண்டியது உங்கள் கடமை.” எனக் கூறினார்.
நிர்மலா சீதாராமன் :
மேலும், ” ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து இருந்தது திமுக. அப்போது அதனை பற்றி கேள்வி எழுப்பாமல் இருந்தீர்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது பிரதமர் மோடி. ஆனால் எப்போதும் மோடி தான் தமிழ்நாட்டிற்கு விரோதி என நீங்கள் கூறி வருகின்றீர்கள். அமைதியாக நாங்கள் பேசுவதை கேட்பதற்கு தைரியம் இருக்கிறதா உங்களுக்கு? தைரியமுடன் அமைதியா உட்கார்ந்து கேளுங்கள். சும்மாய கத்தாதீங்க. சென்னை மெட்ரா பற்றி நான் பேசுகிறேன். சிவா (திமுக எம்பி திருச்சி சிவா) நான் இரண்டு முறை பார்த்து விட்டேன். நீங்கள் கண்ணியமாக பேசவில்லை .சென்னை 2ஆம் கட்ட மெட்ரோவுக்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளது. ” என பல்வேறு கருத்துக்களை ஆவேசமாக தமிழில் பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
திமுக எம்பி திருச்சி சிவா :
இது குறித்து டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நாங்கள் விவாதத்தில் எடுத்து வைத்த எந்த கேள்விகளுக்கும் நேரடியாக அவர் (நிர்மலா சீதாராமன்) பதில் தரவில்லை. ஒவ்வொரு மாநிலம் பற்றியும் அவர் பேசினார். அப்போது தமிழ்நாடு பற்றி நாங்கள் கேள்வி எழுப்பினோம். மதுரை , கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் பற்றி கேட்டோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு நிதி தரவில்லை அது பற்றி கேட்டோம், கல்விக்கான நிதி வரவில்லை என கேட்டோம், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டம் அதற்கான நிதியும் வரவில்லை, தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய 40% செலவழித்து விட்டார்கள். மீதம் 60% மத்திய அரசு தர வேண்டிய பணத்தை தரவில்லை. இப்படியான நேரடியாக கேள்விகளை நாங்கள் கேட்டோம்.
இதற்கு பதில் சொல்லாமல், ஜல்லிக்கட்டு கொண்டு வந்து பற்றி பேசினார். அதற்கும் இருக்கும் சம்பந்தமே இல்லை. காங்கிரசை தாக்க வேண்டும் என்பதற்காக அதனை பேசினார். கிசான் கார்டு கொடுத்துள்ளோம், கழிவறை கட்டியுள்ளோம் என சாதாரண திட்டங்களை பற்றி கூறிக் கொண்டிருந்தார். தெளிவாக எதையும் அவர் கூறவில்லை. மறுபடியும் கூறினோம் நேரடியாக பதில் சொல்லுங்கள் என்றோம்.
நாங்கள் கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் சுற்றி சுற்றி வளைத்து எப்படியோ விவாதத்தை முடித்து விட்டார். மதுரை எய்ம்ஸ் அறிவித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது. அந்த இடத்தில் அஸ்திவாரத்தை தானடி எதையும் காணவில்லை அதற்கும் பதில் இல்லை. நீங்கள் அதையே (எய்ம்ஸ்) பேசிக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கூறினார். மக்க;ளுக்கு நேரடியாக பலன் தரும் திட்டங்களுக்கு எந்த வித பதிலும் தரவில்லை, மத்திய அரசிடம் இருந்து முறையாக வரும் பணமும் வரவில்லை. வேறு எதற்கும் நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. தமிழ்நாடு பற்றிய கேள்விகளுக்கு தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். பிரச்சனைக்கு பதில் கூறாமல் அரசியல் ரீதியாக பதில் சொன்னார். கேரள எம்பிகளுக்கும் இதுதான் நடந்தது.” எனப் பேசினார் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025