“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!
வக்பு சொத்துக்களை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது என திமுக எம்பி ஆ.ராசா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசியுள்ளார்.

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த சட்டதிருத்தின் மீது அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் அக்கட்சி எம்பி ஆ.ராசா பேசுகையில், அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. மத்திய அமைச்சர் பேச்சை கேட்டேன். எங்கிருந்து இந்த கதைகளை அவர் கொண்டு வந்தார் என தெரியவில்லை. அவருடைய பேச்சை சோதனை செய்து பாருங்கள் அது சரியாக இருந்தால் நான் இந்த பதவியை விட்டு ராஜினாமா செய்து கொள்கிறேன். திருச்சியில் 1000 ஏக்கர் வக்பு வாரிய சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். திருச்சிக்கு வாருங்கள் ஆதாரம் தாருங்கள்.
சிறுபான்மை மக்களின் அதிகாரம் பாதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜகவில் இஸ்லாமிய எம்பிக்களே இல்லாதபோது இதுபற்றி எப்படி கருத்துக்களை கேட்டறிந்தார்கள்? இன்று நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான நாள். இந்த நாடு எங்கு தான் போய் கொண்டிருக்கிறது? வக்பு மேம்பாடு என்ற பெயரில் வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்கவே நினைக்கிறது.
மக்களவையில் ஒரு சிறுபான்மை உறுப்பினர் கூட இல்லாத கட்சி சிறுபான்மையினர் உரிமை குறித்து பேசுவது தான் முரணாக உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக, அரசமைப்புக்கு விரோதமாக வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளது. ஒட்டுமொத்த வக்ஃப் சொத்துகளையும் மத்திய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது.
வரலாற்று அடிப்படையிலான சொத்துகளின் உரிமைகளுக்கு இந்த சட்டத்திருத்தம் அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்லாமியர் அல்லாத ஒருவரை வக்பு வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதை எங்களால் ஏற்க முடியாது. வக்பு வாரிய சொத்துக்களின் உண்மைத்தன்மை பற்றி பாஜக எப்போதும் கவலைப்பட்டதில்லை. அவர்களுக்கு மதம் மட்டுமே முக்கியமான ஒன்றாக உள்ளது. நேர்மையாக சொத்துகளை நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராக வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளது என தங்கள் கட்சி அதிருப்தி நிலைப்பாட்டை திமுக எம்பி ஆ.ராசா குறிப்பிட்டு பேசினார்.