பெங்களூருவுக்கு உதவுங்கள்… பிரதமரிடம் கோரிக்கை வைத்த துணை முதல்வர்.!
பெங்களூரு : அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பொதுவான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் தாண்டி பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் தங்கள் மாநில கோரிக்கைகளை முன்னிறுத்தி கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதேபோல பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார். இந்த சந்திப்பு குறித்து டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெங்களூரு அதிக வருவாய் தரும் நகரம். உலகத் தலைவர்களும், உலக முதலீட்டாளர்களும் பெங்களூருக்கு அடிக்கடி வருகை புரிகிறார்கள்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (காங்கிரஸ்) ஆட்சி காலத்தில் பெங்களூருவில் பெரிய உள்கட்டமைப்புகள் கொண்டுவரப்பட்டன. பெங்களூருவுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதனால் எங்களுக்கு போதிய நிதியுதவி, திட்டங்கள் அறிவித்து உதவுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் கோரிக்கை வைத்தேன். பாதுகாப்பு அமைச்சரையும் நேரில் சந்தித்தோம் என கர்நாடாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.