38 வருடத்திற்கு முன்பு நடந்த கொலை.! 9 பேருக்கு ஆயுள் தண்டனை.!
உத்திர பிரதேசம் : 1985ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த காவல்துறை அதிகாரியின் கொலை வழக்கில் 38 ஆண்டுகள் கழித்து 9 பேருக்கு நேற்று மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த கொலை சம்பவ நிகழ்வு குறித்தும், வழக்கின் விவரங்கள் குறித்தும் அரசு வழக்கறிஞர் சதீஷ் சந்திர பாண்டே பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று சிரோஹி பூர்வா பகுதியில் ஒரு நில ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக அங்கு காவல்துறை அதிகாரி பப்பன் சிங் சென்றுள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் சிரோஹி பூர்வா பகுதி கிராம மக்கள் தாக்கியதால் காவல்துறை அதிகாரி பப்பன் சிங் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 60 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். 26 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
குற்றம் சட்டப்பட்டவர்களில், 9 பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தனர். 8 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 9 பேருக்கு ஜான்பூர் மாவட்ட நீதிபதி வாணி ரஞ்சன் அகர்வால் நேற்று (வியாழன்) தண்டனை அறிவித்துள்ளார்.
பாப்பன் சிங் கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார் என அரசு வழக்கறிஞர் சதீஷ் சந்திர பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.