1000 நாட்களில் 20 லட்சம் பேருக்கு வேலை.! நவீனமயமாகும் 4.5 லட்சம் கிராமங்கள்.!
கிராமங்கள் நவீனமயமாக்குவதால் 1000 நாட்களில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
இதுகுறித்து பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று கூறுகையில், அடுத்த 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து, கிராமங்கள் டிஜிட்டல் மயமாகும் என தெரிவித்திருந்தார். மேலும், இதன் முக்கிய நோக்கமே கிராமத்தினர், அரசு அலுவலகங்கள் போன்றவைகளுக்காக நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் கிராமங்களை நவீனமயமாக்குவதே ஆகும்.
இதன் மூலம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்திருந்தார். இவை அடுத்த 1,000 நாட்களில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ஏற்கனவே தற்போது வரையில் இந்தியாவில் சுமார் 1.5 லட்சம் கிராமங்கள் ஆப்டிகல் பைபர் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்ததாக மீதமுள்ள 4.5 லட்சம் கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் திட்டம் நிறைவடையும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
கிராமங்களின் தோற்றம் எவ்வாறு மாறும் :
இந்த கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் வந்தவுடன், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுவான சேவை மையம் திறக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது சேவை மையத்தின் (சி.எஸ்.சி) தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் தியாகி தெரிவித்துள்ளார். ஒரு பொதுவான சேவை மையத்தைத் திறப்பதன் மூலம் குறைந்தது 5 பேருக்கு வேலை அளிக்கப்படும். அதன்படி, குறைந்தது 20 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பொது சேவை மையம் (CSC) திறக்கப்படுவதால் திறக்கப்படுவதால், கிராமவாசிகள் கல்வி முதல் சிகிச்சை வரை பல வசதிகளைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் ஒவ்வொரு வேலைக்கும் நகரத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம அளவிலான தொழில்முனைவோர் (village level entrepreneur) நியமிக்கப்படுவார். அவர்கள், கிராமவாசிகளின் பயிர்களை வீட்டிலேயே விற்க ஏற்பாடு செய்வார்கள். மேலும் வங்கி வசதியும் கிராமங்களில் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்.
ஆப்டிகல் ஃபைபரின் நன்மை :
ஆப்டிகல் ஃபைபர் வருவதால், இணையத்தின் வேகம் கிராமங்களில் அதிகரிக்கப்படும் என்றும் டெஸ்க் டாப்பை இயக்குவது எளிதாக இருக்கும் என்று தினேஷ் தியாகி கூறினார். கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களது தயாரிப்புகளை இ-காமர்ஸ் மூலம் விற்க முடியும். கிராமங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைக்கு அரசின் மின் சந்தையில் சேர்க்க அரசு அவர்களை அனுமதிக்க முடியும். ஆனால், இணைய வேகம் வேகமாக இருக்கும்போது மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும். இது ஆப்டிகல் ஃபைபர் மூலம் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் :
அனைத்து கிராமங்களையும் ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கும் பணிகள் பாரத்நெட் திட்டத்தின் கீழ் நடந்து வருகின்றன. இதனால், தற்போது 4.5 லட்சம் கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் கேபிளிங் பதிப்பது, அடுத்த 1000 நாட்களில் நிறைவடையும் என்று பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று அறிவித்திருந்தார். எனவே, நிச்சயமாக இந்த பணி சரியான நேரத்தில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. நாட்டை தன்னம்பிக்கை கொள்ள, நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஆப்டிகல் கேபிள் மூலம் இணைய வசதி அவசியம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.