பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? ஆம், இல்லை சொல்லுங்கள் – காங்கிரஸ் எம்பி, ராகுல்காந்தி

Default Image

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி குற்றசாட்டு.

கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் விவகாரம், புதிய வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்றுடெல்லியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், 14 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே ஆகியோர் உட்பட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில், நாடாளுமன்ற அவைகளில் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்வியை எழுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பெகாசஸ் தொடர்பாக பிரதமர் மோடியின் அரசாங்கத்தை குற்றசாட்டினார். உச்சநீதிமன்றம், பத்திரிகைகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏன் நாடாளுமன்ற சபையில் விவாதிக்கப்படக்கூடாது என கேள்வி எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடி உங்கள் தொலைபேசியில் ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றம், பல தலைவர்கள், பத்திரிகைகளில் உள்ளவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது.  எனவே, இது ஏன் சபையில் விவாதிக்கப்படக்கூடாது.

இந்திய அரசு பெகாசஸை பென்பொருளை வாங்கியதா? இல்லையா? ஆம், இல்லை பதில் சொல்லுங்கள். பெகாசஸ் ஆயுதத்தை சொந்த மக்கள் மீது மத்திய அரசு பயன்படுத்தியதா? இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற சபையில் பெகாசஸ் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என்று அரசாங்கத்தால் எங்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் தொந்தரவு செய்கிறோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் சபையைத் தொந்தரவு செய்யவில்லை. எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறோம். இந்த ஆயுதம் (பெகாசஸ்) இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிராக இந்த ஆயுதத்தை (பெகாசஸ் ஸ்பைவேர்) ஏன் பயன்படுத்தினீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை, பெகாசஸ் என்பது தேசியவாதம் மற்றும் தேசத்துரோகம் தொடர்பான விஷயம்.

இந்த ஆயுதம் ஜனநாயகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது தனியுரிமைக்கான விஷயம் அல்ல. நான் அதை தேசவிரோத செயலாகவே பார்க்கிறேன். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர் என காட்டமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம், பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றில் “சமரசம்” என்ற பேச்சுக்கே இடமில்லை, நாடாளுமன்றத்தில் விவாதித்தே ஆக வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அப்போது, எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அருகில் இருந்தனர் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்