2019 தேர்தலில் அதிகப்படியான பணத்தை காங்கிரஸ் பயன்படுத்தியதா? வெளியான பரபரப்பு தகவல்!
Congress: கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பு வரி கணக்கை தாமதமாக செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது, காங்கிரஸிடம் சுமார் ரூ.1,823 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை என்றும் வட்டியுடன் வரி மற்றும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2019 மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிகப்படியான பணத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
2013-14 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளுக்கான மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்கக் கோரிய வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, வருமான வரித்துறை தாக்கல் செய்த “satisfaction note”-இல் பல தேர்தல்களின் போது பல பண பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் பட்டியலிட்டுள்ளது.
அதில், கடந்த மக்களவை தேர்தலில் அதிக பணம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ரூ.520 கோடி பணம் மதிப்பீட்டில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் வருமான வரித்துறையிடம் கணிசமான ஆதாரங்கள் இருப்பதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையிடம் உள்ள அனைத்து ஆதாரங்களும் காங்கிரஸிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.