கோயில் அஸ்திவார பூஜைக்காக 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர், நெய் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியின்போது நடைபெற்ற பூஜைக்காக தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால் தயிர் மற்றும் நெய் ஊற்றி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயணன் என்னும் கோவில் ஒன்று ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. எனவே அந்த கோயில் கட்டுமான அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த அஸ்திவார பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் நெய் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள கோவில் கட்டுமான செய்தி தொடர்பாளர் ரம்லால், 11 ஆயிரம் லிட்டர் பால், நெய், தயிர் ஆகியவற்றை தங்கள் தேவநாராயணன் கோயிலின் அஸ்திவாரம் விழாவிற்காக குஜ்ஜார் சமூக உறுப்பினர்கள் மற்றும் பிறரிடமிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், தாராளமாக பக்தர்கள் பால், தயிர் ஆகியவற்றை வழங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் வழிபாடு நடத்த செலவழிக்கப்பட்ட 11,000 லிட்டரில் 1500 லிட்டர் தயிர், மற்றும் ஒரு குவிண்டால் நெய் இருந்ததாகவும், இதற்கான மொத்த செலவு கிட்டத்தட்ட 1.50 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறுகையில், இதுபோன்ற விழாக்களுக்கு பால் ஊற்றுவது குஜ்ஜார் சமூகத்தின் கட்டாயமான வழக்கம் கிடையாது எனவும், கடவுள் நமக்கு கொடுப்பதை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிது இல்லை. இதன் மூலம் நமது கால்நடைகள் பாதுகாக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.