ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்… நாளை முதல்வராக பதவியேற்பு!
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக நாளை மாலை 5.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்கிறார். நாளை மும்பையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா: மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டி ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு இடையே நடந்து வந்தது. தற்பொழுது அந்த போட்டி முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதன் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்றக் கட்சியின் தலைவராக்கியது பெருமைக்குரியது என்றும், பாஜகவின் 132 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் இங்கு இருக்க முடியாது என்றும் கூறினார்.
அதன்படி, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக நாளை மாலை 5.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்கிறார். நாளை மும்பையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள், மகாயுதி கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ். அப்பொழுது, அவருடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோர் இருந்தனர். இதன் மூலம் அம்மாநிலத்தின் 31-வது முதல்வராக பதவியேற்க போகிறார். பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.