மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்! ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை (டிசம்பர் 5) பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை மும்பையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள், மகாயுதி கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேவேந்திர பட்னாவிஸ் , இன்று மாலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் தற்போதைய பொறுப்பு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், அஜித் பவாருக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.