ராஜஸ்தானில் 24,000 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டங்கள்… பிரதமர் மோடி தொடங்கிவைப்பு.!
பிரதமர் மோடி, இன்று ராஜஸ்தானில் 24,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
ராஜஸ்தானின் பிகானேரில் புதிதாக உருவாக்கப்பட்ட 500 கிலோமீட்டர் அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச் சாலை உட்பட ராஜஸ்தானில் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, எல்லைப் பகுதியிலுள்ள கிராமங்கள் பல தசாப்தங்களாக வளர்ச்சியடையாமல் இருந்தன.
அவற்றின் வளர்ச்சிக்காக கிராம மேம்பாட்டுத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமங்களாக அறிவித்தோம், இக்கிராமங்களை பார்வையிட, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது கிராமங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. மாநிலத்திற்கு புதிய முன்னேற்றங்களை வழங்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அமிர்தசரஸ்-ஜாம்நகர் 500 கிமீ விரைவுச் சாலையின் பிரிவைத் தொடங்குவதில் நான் அதிர்ஷ்டசாலி என்று கூறிய பிரதமர் மோடி, இந்த வழித்தடமானது ராஜஸ்தானை அரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கும் என்று குறிப்பிட்டார்.