நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், சிறுமி படுகாயமடைந்து தற்போது வரையில் சிகிச்சையில் இருக்கிறார். இது போல பல்வேறு நாய்க்கடி சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது நடவடிக்கைகையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது நாய்க்கடி அல்லது தெருநாய்களிடம் இருந்து மக்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என ஓர் வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
மத்திய அரசின், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை (Dept of Animal Husbandry & Dairying) சார்பில் சமூக வலைத்தளத்தில் வெளியான பாதுகாப்பு நடவடிக்கையின்படி,
- ஒரு நாயை நேருக்கு நேர் அதன் கண்களை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
- ஒரு குரைக்கும் நாய் உங்களை அணுகினால், அதனை நோக்கி கைகளை நீட்டாமல், கைகளை இணக்கமாக மடக்கி வைத்து நிற்குமாறு கூறியுள்ளனர். இப்படி, செய்கையில் அது வழக்கமாக செய்கையோடு நகர்ந்து போய்விடும்.
- உறும் நாய் உங்கள் அருகில் நெருங்கினால், எதுவும் செய்யாமல் ஒரு மரத்தைப் போல் பாசாங்கு செய்து அசையாமல் நிற்க வேண்டும்.
- நாய் உங்களை மோப்பம் பிடிக்க அனுமதிக்க வேண்டும். அப்படி செய்கையில், அது உங்கள் வாசனையை நுகர்ந்துவிட்டு நகர்ந்து சென்றுவிடும்.
- ஒருவேளை உங்களை நாய் கடிக்க வந்துவிட்டால், உடலை சுருக்கி முகத்தை மறைத்து சுருண்டு படுத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் முகம் , உடல் காயமடையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
என நாய்கடியில் இருந்து தற்காத்து கொள்ள சில பாதுகாப்பு வழிமுறைகளை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.