வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம்
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் என கூறப்பட்ட நிலையில், இன்றே உருவானதாக இந்திய வானிலை மையம் தகவல்.
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் வடமேற்கு, வடக்கு டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக்தில் பாதிப்பு இருக்காது என்றும் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது.
நேற்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.