பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு.. பிரதமரை யாராலும் தடுக்க முடியாது! – பாஜக
மேகாலயாவில் வரும் 24-ஆம் தேதி பிரதமர் மோடி மேற்கொள்ள இருந்த பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு.
மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 16ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மூன்று மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது.
மோடி பரப்புரைக்கு மறுப்பு:
இந்த நிலையில், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மேகாலயாவில் வரும் 24-ஆம் தேதி பிரதமர் மோடி மேற்கொள்ள இருந்த பரப்புரை கூட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துராவில் உள்ள பி.ஏ.சங்மா விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பி.ஏ.சங்மா அரங்கில் பணிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது மேகாலயா அரசு. துராவில் உள்ள பொது மைதானத்தைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததை அடுத்து, கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் NPP இடையே போட்டி கடுமையாக மாறியுள்ளது.
பாஜக அலையைத் தடுக்க முயற்சி:
தனியார் மைதானத்தின் உரிமையாளர்களை அணுகியபோது, அவர்களும் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேகாலயாவில் பாஜக அலையைத் தடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், என்பிபி அல்லது டிஎம்சி-ஆக இருந்தாலும், மேகாலயாவில் மோடி அலை மற்றும் மாநிலத்தில் காவி நிற எழுச்சியால் அனைவரும் முற்றிலும் ஆச்சரியப்படுகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளரும் வடகிழக்கு இணைப் பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்ஹா கூறியுள்ளார்.
பா.ஜ.க.வின் விண்ணப்பம்:
பாரதிய ஜனதா கட்சியின் துரா நகர மாவட்டக் குழுத் தலைவர் தௌலத் சி மாரக், வெஸ்ட் கரோ ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்து, பிப்ரவரி 24-ஆம் தேதி பிஏ சங்மா விளையாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார். அடுத்த நாள், மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இயக்குனர், பா.ஜ.க.வின் விண்ணப்பத்தை மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு அனுப்பி, “பி.ஏ. சங்மா ஸ்டேடியத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது நல்லதல்ல” என்று குறிப்பிட்டார். “பிஏ சங்மா ஸ்டேடியம் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் அதை அனுமதிக்க முடியாது” என்று அரசாங்கத்திடம் இருந்து கட்சிக்கு கடிதம் வந்துள்ளதாக சின்ஹா கூறினார்.
பிரதமரை யாராலும் தடுக்க முடியாது:
ஆனால், முதல்வர் கான்ராட் கே சங்மா கடந்த ஆண்டு டிச.16ம் தேதி ஸ்டேடியத்தை பிரமாண்டமான முறையில் திறந்து வைத்தார். ஸ்டேடியம் முழுமையடையத நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரதமரின் பேரணிக்கு பயன்படுத்த முடியாததாகவும் அறிவிக்கப்படுவது எப்படி?” சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். ரூ.127 கோடி செலவில் ஸ்டேடியம் கட்டப்பட்டதாகவும் அதில் 90% நிதி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. எனவே, பிரதமர் மோடி மேகாலயா மக்களிடம் பேச முடிவு செய்துவிட்டால், அவரை யாராலும் தடுக்க முடியாது என்றும் ரிதுராஜ் சின்ஹா கூறியுள்ளார்.