டெல்லி வன்முறை: கைதான 115 பேரின் பட்டியல் வெளியீடு – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி டிராக்டர் பேரணி வன்முறையில் கைதாகி சிறையில் உள்ள 115 பேரின் பட்டியலை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 26- ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது, அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பே டெல்லியில் நுழைந்ததால், விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைக்குண்டி வீசப்பட்டது. பின்னர் விவசாயிகளுக்கு, காவல்துறைக்கும் இடையே வன்முறை வெடித்தது. பின்னர் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து செங்கோட்டையில் தேசிய கொடி பறந்த கம்பத்தில் விவசாய கொடி ஏற்றியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது வன்முறை தொடர்பாக டெல்லியின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 115 பேரின் பட்டியலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். வன்முறையில் காணாமல் போன விவசாயிகளைக் கண்டுபிடிக்க எங்கள் அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் செய்யும் என்றும் தேவை ஏற்பட்டால் நான் லெப்டினன்ட் கவர்னரிடமும், மத்திய அரசிடமும் பேசுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் சட்டக் குழு கெஜ்ரிவாலை சந்தித்து, காணாமல் போன 29 விவசாயிகளின் பட்டியலை வழங்கி, இது விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான சதி என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், நீதித்துறை விசாரணைக்கான கோரிக்கை குறித்து முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட பின்னர் 115 பேர் டெல்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களில் பலர் செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் குடும்பத்தினருடன் சேர முடியவில்லை. காணாமல் போனதாக குடும்பத்தினர் தேடுவார்கள் என்பதால், 115 பேரின் பெயர்கள், வயது மற்றும் முகவரி ஆகியவற்றை வெளியிட்டுள்ளோம் என்றும் இதனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அடையாளம் காணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.