சீனாவுடன் தொடர்பு.? டெல்லியில் செய்தி நிறுவன பத்திரிக்கையாளர்கள் வீடுகளில் காவல்துறையினர் சோதனை.!
டெல்லி : டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது சட்ட விரோத தடுப்பு சட்டம் கீழ் டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்து டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் குழு இன்று நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தை சேர்ந்த 8 பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாகவும், இன்று அதிகாலை முதலே தொடர்ந்த சோதனையில் பத்திரிகையாளர்களின் லேப்டாப், செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்தி நிறுவனம் மீதான இந்த சோதனை நடவடிக்கைக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டே அமலாக்கத்துறை , நியூஸ் கிளிக்செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. சீனா நிறுவனத்துடன் சட்டவிரோதமாக தொடர்பு வைத்திருப்பதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாவும் குற்றம் சாட்டப்பட்டு சோதனைகள் நடைபெற்றன.
இந்த சோதனை நடவடிக்கையை எதிர்த்து நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு முடிவில் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தான் அண்மையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம், இந்தியாவில் உள்ள நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக எழுதி இருந்தது. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து தான் டெல்லி காவல்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாகா, நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு நெனவல் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி அளிப்பதாகவும், அவர் சீன நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.