டெல்லி குடியரசு தினவிழா! ஒத்திகை அணிவகுப்பு.!
டெல்லியில் வரும் 26 ஆம் தேதி, நடைபெறும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கர்தவ்யா பாதையில் முழு ஆடை ஒத்திகை அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.
இந்தியா தனது 74வது குடியரசு தின விழாவை, ஜனவரி 26ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. இந்த அணிவகுப்பில் எகிப்திய இராணுவக் குழு பங்கேற்கிறது. சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி கலந்து கொள்கிறார். குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பின் முன்னோடியாக, அதன் முழு ஆடை ஒத்திகை டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நேற்று நடைபெற்றது.
1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த குடியரசு தின அணிவகுப்பு, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒன்றுபட்ட இந்தியாவின் அடையாள விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேற்கு வங்காளம், அசாம், ஜம்மு & காஷ்மீர் ஆகிய 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது அலங்கார ஊர்திகளுடன் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன. மேலும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியின் கூற்றுப்படி, சுமார் 45,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற முழு ஆடை அணிவகுப்பு ஒத்திகையின் போது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் கர்தவ்யா பாதையில் அணிவகுத்துச் சென்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வான்வெளி மூலம் நடத்தப்படும் காட்சிகள், உட்பட பாரம்பரிய அணிவகுப்பு என பல புதிய நிகழ்வுகளும் இந்தாண்டு குடியரசு தினவிழாவில் நடைபெறவிருக்கிறது.
இந்த குடியரசு தின அணிவகுப்பின் முழு ஆடை ஒத்திகையில், இந்திய ராணுவத்தின் தலைமையில் டேர் டெவில்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் இந்த குடியரசு தின அணிவகுப்பை தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்கலாம் அல்லது டெல்லியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டும் ரசிக்கலாம்.