மகிழ்ச்சி செய்தி: 300 க்கும் கீழ் குறைந்த கொரோனா புதிய பாதிப்பு…இறப்பு 24 ஆக பதிவு..!
டெல்லியில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 300 க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது, இறப்புகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா போரில் வெற்றியையும் கண்டுள்ளது கெஜ்ரிவால் அரசு.
தற்போது டெல்லியில் 300 க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 238 பேர் கொரோனாவால் புதியதாக பாதிப்படைந்துள்ளனர். 24 பேர் மட்டுமே டெல்லியில் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,772 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,30,671 ஆக உயர்ந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 504 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 14,01,977 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லியில் கொரோனா வார்டில் 3922 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி மக்கள் ஊரடங்கை சரிவர பின்பற்றியதால் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை அரசால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.