மகிழ்ச்சி செய்தி: 24 மணி நேரத்தில் 500 க்கும் குறைவான கொரோனா புதிய பாதிப்பு…பாசிட்டிவ் ரேட் 0.61% ஆக குறைவு..!
டெல்லியில் முதல் முறையாக 500 க்கும் கீழ் குறைந்தது கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் முழுஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்புகளை படிப்படியாக குறைத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறந்தவர்கள் 45 பேர் என உறுதிசெய்யப்பட்டள்ளது. தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் 8,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.61% ஆக குறைந்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து 4 வது நாளாக கொரோனா பாசிட்டிவ் ரேட் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், மேலும் இறப்பு விகிதம் 1.71% ஆகவும், மேலும் கொரோனாவால் தினசரி இறப்பு எண்ணிக்கை 100 க்கும் குறைவாகவும் பதிவாகியுள்ளது என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.