கெஜ்ரிவால் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது… மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்!

Arvind Kejriwal

Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதனிடையே, மார்ச் 21ம் தேதி முதல் ஒருவாரமாக அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதன்பின், டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் உள்ள  2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அந்தவகையில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அமலாக்கத்துறையின் ஆதாரங்களை பார்த்தால் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

ஆதலால் சட்டத்தின் அடிப்படையிலேயே கைது மற்றும் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, தேர்தல் நேரம் என்பதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. அதேபோல் தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் முதலமைச்சர் என்பதால் எந்த சிறப்பு சலுகையும் அளிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து, அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்ககோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. எனவே, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடுவார் எனவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்