நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய நெறிமுறைகளை வெளியிட்டது டெல்லி அரசு.!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகளை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். இதுவரை தலைநகரான டெல்லியில் 29,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 650 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், சிலரை பார்க்காமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் கூட மத்திய அமைச்சரான ஹர்ஷ்வர்தன், மருத்துவமனைகளில் பரிசோதனைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியிருந்தார். இதனால் தற்போது டெல்லி அரசு கொரோனா நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குறைந்தது 15 நிமிடங்களுக்குள் எந்த விவரமும் கேட்காமல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு 1 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
பின்னர் காத்திருக்கும் நேரத்தில் நோயாளிகளுக்கு தேவையான உணவுகளையும், தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். மேலும் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லையென்றால் உடனடியாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது அந்த நிர்வாகத்தின் கடமை என்றும், அதுவரை நோயாளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த மருத்துவமனை செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் அவசர எண்ணை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நோயாளிகளுக்கு வழங்கியுள்ள சிகிச்சை, உணவு மற்றும் பிற வசதிகளில் ஏதேனும் குறை இருந்தால், அதனை புகார் செய்ய அவசர எண்ணை பயன்படுத்தலாம். அதன்படி, மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.