தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு – டெல்லி அரசு!
தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வர அனுமதி மறுக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தொடர்ந்து பரவி கொண்டே தான் இருக்கிறது. அவ்வப்போது குறைந்து வந்தாலும் சில சமயங்களில் கொரோனா பரவல் அதிகரித்து விடுவதால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போது அரசு ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 16 முதல் தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி டெல்லியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முன்னணி ஊழியர்கள் உட்பட அனைவருமே தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வரை விடுப்பில் இருப்பவர்களாகவே கருதப் படுவார்கள் எனவும், அக்டோபர் 15 க்குள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்துக் கொள்ளாத ஊழியர்கள் நிச்சயம் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.