கலால் கொள்கை வழக்கு..! மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பான மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி மதுபான கொள்கை :
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும் கூறி மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது.
மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் :
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், முதலில் 5 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் மனு தாக்கல் :
பின்னர் மணீஷ் சிசோடியா, ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் மணீஷ் சிசோடியாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிசோடியா விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும், சிபிஐ அவரை காவலில் வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் வாதங்களை முன் வைத்தார்.
வழக்கு விசாரணை :
இருப்பினும், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அவரது ஜாமீன் மனுவை எதிர்த்தது. சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டால் எங்கள் விசாரணையை சீர்குலைந்துவிடும் என்றும் அவர் தொடர்ந்து ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்வார் எனவும் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
ஜாமீன் மனு தள்ளுபடி :
இதையடுத்து, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மேலும், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள மணீஷ் சிசோடியா ஏப்ரல் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.