3 மாணவர்கள் உயிரிழப்பு.! 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்.! தீவிரமடைந்த போராட்டம்…
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட மழைநீர் வெள்ளத்தில், பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் தானியா சோனி (வயது 25), ஸ்ரேயா யாதவ் (வயது 25) மற்றும் நவீன் டெல்வின் (வயது 28) ஆகிய மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான அனுமதி அளித்த அரசு அதிகாரிகள், கட்டிட உரிமையாளர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தனியார் பயிற்சி மையம் முன்பு ஐஏஎஸ் பயிற்சி பெரும் மாணவர்கள் பலர் நேற்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக, தனியார் ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர், அதன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், டெல்லியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்த ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர்.
இதுவரை டெல்லி ராஜிந்தர் நகரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 13 ஐஏஎஸ் மையங்களில் , சட்ட விரோதமாக அடித்தளத்தில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயிரிழப்பு விவகாரம் இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.