அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!
கெஜ்ரிவால், சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் தோல்வியடைந்துள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள் மட்டும்), 2015 (5 ஆண்டுகள்), 2020 (5 ஆண்டுகள்) என டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி இந்த முறை தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 47 தொகுதிகளில் பாஜகவும், 23 தொகுதிகளில் மட்டும் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகின்றன.
இதில் பல்வேறு தொகுதியில் இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி ஆம் ஆத்மி கட்சியினருக்கு பேரதிர்ச்சியை அளித்து வருகிறது. 3 முறை வெற்றி வாகை சூடிய புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங்-கிடம் தோல்வி அடைந்துள்ளார்.
அதே போல, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா தோல்வி அடைந்துள்ளார். ஷாகூர் பஸ்தியில் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தோல்வி அடைந்துள்ளார். ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் தொடர் தோல்வியை தழுவ, அக்கட்சிக்கும், கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போதைய டெல்லி மாநில முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரமேஷ் பிதுரியை விட 989 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி அடைந்துள்ளார்.