டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து – நீதிமன்றத்தில் வழக்கு!
காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பான அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
காஷ்மீர் பைல்ஸ் என்னும் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், இந்த படத்திற்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள்.
படத்தை யூடியூபில் வெளியிட்டால் அனைவரும் இலவசமாக பார்ப்பார்கள் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து பாஜகவினரிடம் பெருமளவில் கண்டனத்தை பெற்ற நிலையில், டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பதாக பாஜகவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்குள் நுழைந்து சில பொருட்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர். எனவே, அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக தேர்தலில் தோற்கடிக்க முடியாததால் காவல்துறை உதவியுடன் முதல்வர் கெஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சிப்பதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுபட்டதாக இளைஞர்களை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா அவர்கள் தெரிவித்துள்ளார்.