திகார் சிறையில் சரணடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரணடைந்தார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதற்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று திகார் சிறையில் சரணடைந்தார்.
கடந்த மே 10 அன்று உச்சநீதிமன்றம் டெல்லி மதுவிலக்கு கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2 அன்று சரணடையுமாறு அறிவுறுத்திருந்தியதை தொடர்ந்து இன்று சரணடைந்துள்ளார்.
சிறைக்கு செல்லும் முன் கெஜ்ரிவால், “நான் ஊழலில் ஈடுபட்டதற்காக அல்ல, ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக சிறைக்கு திரும்புகிறேன்” என்றார். சிறைக்கு செல்லும் முன்னர், கெஜ்ரிவால் மகாத்மா காந்தியின் நினைவிடம் ராஜ்காட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோவிலுக்கும் சென்றார். கெஜ்ரிவால், உடல்நலக் காரணங்களை முன்வைத்து நேற்று ஜாமீன் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு உடனடி ஜாமீன் கிடைக்கவில்லை.
“இந்த முறை தனக்கு என்ன வகையான சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரியவில்லை. இவர்கள் இந்த முறை என்ன செய்வார்கள் எனக்கு தெரியவில்லை. நாங்கள் பகத்சிங்கின் சீடர்கள், நாட்டை காப்பதற்காக சிறைக்கு செல்கிறோம். அதிகாரம் ஆதிக்கமாக மாறும்போது, சிறை செல்லுவது ஒரு பொறுப்பாகிறது” என்று அவர் கூறினார்.