டெல்லி தாக்குதல் ..! நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின்
- டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களால் கண்ணில் பட்ட அனைத்து பொருள்களையும் மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் தாக்கினர்.
இந்த தாக்குதலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்து அனைவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது, ஆயிஸ் கோஷ் கூறுகையில் ,இந்த கொடூர தாக்குதலுக்கு பாஜக மாணவரணியான (ஏ.பி.வி.பி.) காரணம் என குற்றம் சாட்டினார்.இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தி.மு.க எம்.பி.கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.