இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்
டெல்லி சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க பல்வேறு வாக்குறுதிகளை கூறி வருகின்றன.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக வேட்புமனு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவும், பிப்ரவரி 8இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
ஆம் ஆத்மி :
கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ளது. தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மக்கள் தேர்வு செய்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்கிறேன் என சபதம் எடுத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.
பாஜக :
எதிர்க்கட்சியாக உள்ள பாஜக , 1998-க்கு பிறகு டெல்லியை ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. தேசிய அளவில் 3வது முறை ஆட்சியை கைப்பற்றிய முனைப்பில் தலைநகரை கைப்பற்றும் நம்பிக்கையில் பாஜக தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன்வைத்தும், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தும் டெல்லி வாக்காளர்களை பாஜக கவர்ந்து வருகிறது.
காங்கிரஸ் :
1998 முதல் 2013 வரையில் 15 ஆண்டுகள் ஆட்சியை கைப்பற்றி இருந்த காங்கிரஸ் தற்போது டெல்லியில் தங்கள் இருப்பை பலமாக பதிவு செய்ய போராடி வருகிறது. கடந்த ஒரு தசாப்தத்தில் அங்குள்ள தேர்தல் களம் ஆம் ஆத்மி vs பாஜக என மாறியுள்ளது. இதனை போக்கி இந்த முறை ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களமாடி வருகிறது.
இப்படியாக 3 கட்சிகளும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் டெல்லி மக்கள் முன்னிலையில் கூறிய பல்வேறு தேர்தல் வாக்குறுதி தொகுப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
ஆம் ஆத்மி வாக்குறுதிகள் :
- மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவி தொகை அளிக்கப்படும்.
- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தனியார் அல்லது அரசு மருத்துவமனை என எங்கும் மருத்துவ செலவு இலவசம்.
- மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நியமனம் செய்யப்படும் தனியார் பாதுகாவலர்களுக்கு அரசே ஊதியம் வழங்கும்.
- ஆட்டோ ஓட்டுனர்களின் மகள்களின் திருமணத்திற்கு உதவி தொகையாக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
- வடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவச குடிநீர் சேவை அளிக்கப்படும்.
- டெல்லி குருத்வாரா பகுதிகளில் உள்ள மத பூசாரிகளுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும்.
- மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும். மெட்ரோவில் பயணம் செய்ய மாணவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும்.
பாஜக வாக்குறுதிகள் :
- மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
- மாநிலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் 6 ஊட்டச்சத்து பெட்டிகள் மற்றும் ரூ.21,000 நிதிஉதவி வழங்கப்படும்.
- ஹோலி பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு சிலிண்டர் இலவசம்.
- வறுமை கோட்டிற்கு கிழே உள்ளவர்களுக்கு சிலிண்டர் விலை ரூ.500 எனும் மானிய விலையில் கொடுக்கப்படும்.
- 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டோருக்கு ரூ.2500 மாத உதவித்தொகை வழங்கப்படும். விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.3000 மாத உதவி தொகையாக வழங்கப்படும்.
- “வளர்ச்சியடைந்த டெல்லி” எனும் திட்டத்தின் கீழ் டெல்லியை முன்னேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- தற்போதுள்ள அரசு மேற்கொண்டு வரும் அனைத்து அரசு நலத்திட்டங்களும் ஊழல் எதுவும் இன்றி அப்படியே தொடரப்படும்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கிழே உள்ள மக்களுக்கு கூடுதல் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
காங்கிரஸ் வாக்குறுதிகள் :
- பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவி தொகை.
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.8,500 நிதி உதவி வழங்கப்படும்.
- வேலையிலலா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
- டெல்லியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு திட்டம்.
- 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- ரூ.500 எனும் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும்.
- அரிசி, சர்க்கரை , சமயம் எண்ணெய், பருப்பு, தேயிலை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.