#Delhi Acid Attack: Flipkart, Amazon நிறுவனங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுக்கு நோட்டீஸ்.
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக Flipkart மற்றும் Amazon நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது பள்ளி (12ம் வகுப்பு) மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
பைக்கில் வந்த இருவர் 17 வயது பள்ளி மாணவி மீது அமிலம் போன்ற பொருளை வீசியுள்ளனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில், ஆசிட் விற்றதாக இரண்டு இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ‘பிளிப்கார்ட்’ மூலம் ஆசிட் வாங்கினார் என்றும் ‘அமேசான்’ மற்றும் ‘பிளிப்கார்ட்’ ஆகியவற்றில் ஆசிட் எளிதாகக் கிடைக்கும் எனவும் DCW அறிந்துள்ளது. இது சட்டத்திற்குப் புறம்பானது என்று DCW கடிதம் எழுதியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவர் மீது நைட்ரிக் அமிலத்தை வீசியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சச்சின் அரோரா (20), அவரது 2 கூட்டாளிகள் ஹர்ஷித் அகர்வால் (19), வீரேந்தர் சிங் (22) அடங்குவர்.