பரபரக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல்.. நாளை முதல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தீவிர பிரச்சாரம்.!
நாளை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள உள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, தற்போது பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டபல தலைவர்கள் நட்சத்திர பிரச்சார பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் படி வரும் 29ஆம் தேதி பிரதமர் மோடி கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதே போல தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சார விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளை கர்நாடக தெற்கு பகுதியில் பெலகாவி மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் இருந்து, பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கர்நாடக பிரச்சாரத்தில் பேச்சாளர்களாக களமிறக்க உள்ளனர்.