அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள்….
தலைநகர் தில்லியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.540 கோடிக்கு நிலையான எச்.எப். டான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக சீனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.