இன்னும் இரண்டு வாரங்களில் மெட்ரோ சேவைகள் தொடங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும்- ஹர்தீப் சிங்.!
மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து வசதிகளை தடை செய்துள்ளது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டியில் கூறியதாவது, மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மெட்ரோ சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல நகரங்களில் பெரும் வருமான இழப்பீடு மட்டுமில்லாமல் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே சமயத்தில் அனைத்து நகரங்களிலும் மெட்ரோ சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும்,50 சதவீத பயணிகளை கொண்டே மெட்ரோ ரயில்கள் துவங்கப்படும். ஏனெனில் பயணிகளின் நெருக்கடியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மெட்ரோ சேவைகளை குறித்த இறுதி தீர்மானம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய வழிமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.