இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு!
வட இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கனமழைக்குப் பிறகு, பேரிடராக மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.
சம்மர் ஹில்லில் உள்ள ஒரு சிவன் கோவிலின் இடிபாடுகளில் இருந்து மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். 11,637 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இன்னும் 600 சாலைகள் மூடப்பட்டுள்ளன, அவற்றில் 550 அடுத்த மூன்று நாட்களில் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை (PWD) தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில், காங்ரா மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 2,074 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.