ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் இறப்பு எண்ணிக்கை 12 – ஆக உயர்வு.!
ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பைதராணி, பிராமணி, சுபர்நரேகா மற்றும் புதுப்பலங்கா ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து பல மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை, கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளில் மாற்றப்பட்டனர்.
மேலும் வியாழக்கிழமை மட்டும் மழையால் மயூர்பஞ்ச், கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களில் இருந்து 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் 2,757 வீடுகள் சேதமடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் வீடுகள் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மொத்த இறப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மகாநதி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.