பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல்… போலீசார் அதிரடி கைது.!
பிரதமர் மோடி, அமித்ஷா, மற்றும் பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறைக்கு போன் செய்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர குமார் சிங் கூறுகையில் குடிபோதையில் அந்த நபர் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் சுதீர் சர்மா என்றும் அவர் கார்பென்டராக வேலை செய்து வருபவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. சுதீர் சர்மா முதலில் காலை 10.46 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து இரண்டாவது முறையும் காலை 10.54 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, 2 கோடி ரூபாய் தராவிட்டால் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொன்றுவிடுவேன் என்று கூறியிருக்கிறார். இதன்பின் விசாரணையில் சுதீர் சர்மாவின் மகன் அங்கித், தன் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், அவர் குடித்துவிட்டு இவ்வாறு பேசியுள்ளதாக கூறினார்.