பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்? தீவிர விசாரணையில் காவல்துறை!
பிரதமருக்கு மிரட்டல் கொடுத்த அந்த சந்தேக நபரைப் பிடிக்க உடனடியாக ஒரு போலீஸ் குழு அங்கு அனுப்பப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை : பிரதமர் நரேந்திர மோடியை கொல்லப்போவதாக மும்பை போலீசாருக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி இந்த மிரட்டல் செய்தி ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செய்தி அனுப்பிய சந்தேக நபரைத் தேடுவதற்கு தனிக்குழு ஒன்று அஜ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் வழியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் படி, அதிகாலையில் போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனில் வந்த வாட்ஸ்அப் செய்தியில், பிரதமர் மோடியை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்துவதற்கான சதித்திட்டம் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள், இருப்பினும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.எனவே, இந்த மிரட்டல் விடுத்த நபர் பிடிபட்டவுடன் இந்திய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பை போலீஸ் ஹெல்ப்லைனுக்கு இதற்கு முன் பலமுறை இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்துள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் பிரதமருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக 34 வயதான கன்டிவ்லியில் வசிக்கும் ஷீத்தல் சவான் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.