தொடரும் கொரோனா நோயாளிகளின் மரணம்….! மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்…!
கொரோனா நோயாளிகளின் மரணத்தால், மன அழுத்தத்தில் இருந்த மருத்துவர் விவேக் ராய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பலர் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் விவேக் ராய் என்ற மருத்துவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு மாதத்திற்கு மேலாக அந்த பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார். இதனை அடுத்து இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கூறுகையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிறந்த மருத்துவர் விவேக். இவர் பணிபுரிந்த காலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார். நோயாளிகள் படும் துன்பத்தையும், அவர்களது மரணத்தையும் பார்த்த அவர் வெறுப்புணர்வில், கடினமான முடிவெடுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.