அலைமோதிய மக்கள் கூட்டம்… கடைசித் தேதியை மாற்றம் செய்த ஆதார் ஆணையம்.!
ஆதாரில் உள்ள தனிப்பட்ட தகவல்களை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரையில் அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசமானது வரும் டிசம்பர் 14 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய குடிமகனின் தனிப்பட்ட அடையாளச் சான்றுகளில் மிக முக்கிய ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. அரசு திட்டங்கள், தனிப்பட்ட அடையாளம், முகவரி சான்று என பல்வேறு வகைகளில் ஆதார் இந்திய மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. இந்த ஆதாரில் புகைப்படம், கைவிரல் ரேகைகள், கருவிழி விவரங்கள், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பதிவாகி இருக்கும்.
இதனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்திய குடிமக்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆதார் விவரங்களை புதுப்பிக்க இலவசமாக myAadhar இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தான் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாளை மறுநாளுடன் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க கடைசி தேதி என்பதால், நாட்டில் உள்ள பல்வேறு மையங்களில் ஆதார் விவரங்களை புதுப்பிக்க மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நெல்லை , மதுரை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆதார் மையங்களில் கூட்டம் குவிந்தது.
இப்படியான சமயத்தில் தான். நேற்று ஆதார் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து டிசம்பர் 14ஆம் தேதியை கடைசி தேதியாக அறிவித்து ஆதார் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 14ம் தேதி வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 14 என அறிவிக்கப்பட்ட இறுதி தேதியானது மீண்டும் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14ம் தேதி இறுதி தேதி என மாற்றப்பட்டுள்ளது.