பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!
பி.எப் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக,மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித்துறை தெரிவித்துள்ளது.
சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ்,கடந்த ஆண்டு மே 3 ம் தேதி மத்திய அரசானது,ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.இந்த அறிவிப்பின் படி,ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன்(யுஏஎன் எண்) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு,ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்களின் பி.எப். கணக்கில் செலுத்தப்படும் தொகையானது,வரவு வைக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.இந்த நடைமுறையானது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில்,பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) அறிவித்துள்ளது.
எனவே,இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் http://www.epfindia.gov.in/site_en/index.php என்ற லிங்க் மூலமாக,உடனடியாக பி.எப். கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம்.