இந்தியாவில் பாதிப்பு 21,700 ஆகவும், பலி எண்ணிக்கை 686 ஆகவும் அதிகரிப்பு.!
தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா என்ற கோவிட் 19 வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மனதிற்கு சற்று மகிழ்ச்சியை தருகிறது. இதுவரை 4,325 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,652 பேர் பாதிக்கப்பட்டு, 269 பேர் பலியாகியுள்ளனர். 789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 2,407, டெல்லியில் 2,248, ராஜஸ்தானில் 1,890, மத்திய பிரதேசத்தில் 1,695, தமிழ்நாட்டில் 1,629 மற்றும் உத்தரபிரதேசத்தில் 1,509 பேர் என அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உலகளவில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 26,58,794 பேர் பாதிக்கப்பட்டு, 1,85,440 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பின்னர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,30,024 பேர் குணமடைந்துள்ளார்கள். உலகளவில் அதிகப்படியாக அமெரிக்காவில் 8,49,092 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 47,684 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.