தண்ணீருக்கு பதிலாக கட்டாயப்படுத்தி சிறுநீரை குடிக்கவைத்து அடித்து கொல்லப்பட்ட தலித் தொழிலாளி!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டம் சங்கலிவாலா கிராமத்தை சேர்ந்த தலித் இனத்தை சேர்ந்த தொழிலாளி தான் ஜாக்மலே சிங். இவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அப்பா மகன் என நான்கு பேர் கொண்ட கும்பலால் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். அதன் பின்பு இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு ரிங்கு மாற்றும் அவனது தந்தையுடன் இவருக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பிரச்சனை அப்பொழுதே பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனாலும், கடந்த 7 ஆம் தேதி எனது கணவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இது குறித்து இறந்த ஜாக்மலே சிங் அளித்துள்ள வாக்குமூலத்தில், நவம்பர் 7-ம் தேதி என்னை ரிங்குவின் வீட்டுக்கு அடித்து இழுத்துச் சென்றனர். ஒரு கம்பத்தில் மூன்று மணி நேரம் கட்டிவைத்திருந்தனர். பிந்தேர் என்பவர் கையில் கம்பியை வைத்திருந்தார். ரிங்கு என்னுடைய கையை இறுக்கமாக பிடித்துகொண்டார். அப்போது அவருடைய அப்பா அமர்ஜீத் கையில் கம்பியை எடுத்துவந்தார். பின்னர், அவர்கள் இரக்கமில்லாமல் என்னைத் தாக்கினர். நான், ரிங்குவிடம் தண்ணீர் கேட்டேன். அவன், சிறுநீரைக் கொண்டுவந்து என்னைக் கட்டாயப்படுத்தி குடிக்கவைத்தான்’ என்று மிகவும் பரிதாபமாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கூறிய காவல் துறையினர், அமர்ஜீத் சிங், ரிங்கு, லக்கி மற்றும் பிந்தேர் ஆகிய நால்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.